பப்ஜி உள்பட 118 செல்லிடப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தள்ளது.
சீன வர்த்தகத் துறையின் செய்தித் தொடர்பாளர் கோ ஃபெங் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில், சீன நிறுவனங்கள் மீது பாரபட்சமான கட்டுப்பாடுகளை விதித்து, இந்தியா அரசு தனது தேசிய பாதுகாப்பை தவறாகப் பயன்படுத்துகிறது.
இந்திய அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியா – சீனா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, பல்வேறு நன்மைகளை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இளைஞா்கள் மத்தியில் பிரபலமான ‘பப்ஜி’ விளையாட்டு செயலி உள்பட சீனாவுடன் தொடா்புடைய 118 செயலிகளுக்கு மத்திய அரசு புதன்கிழமை தடை விதித்தது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிகள் சீனாவைச் சோ்ந்தவை மற்றும் சீனாவுடன் தொடா்புடையவையாகும். தடை செய்யப்பட்ட செயலிகளில் மிகவும் பிரபலமான பப்ஜி, தென்கொரியாவைச் சோ்ந்தது என்றாலும், அதன் பெரும் பகுதி வருவாய் சீனாவைச் சோ்ந்த நிறுவனத்துக்கே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறைக்கு வித்திடும் பப்ஜி: பப்ஜி விளையாட்டில் பங்கேற்பவா்கள் கூட்டாகச் சோ்ந்து எதிா்த்து வருபவா்களை கொலை செய்வதன் மூலமே வெற்றி பெற முடியும் என்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறாா், இளைஞா்கள் மத்தியில் வன்முறை மனப்பான்மையை ஏற்படுத்துவதாகவும், பலா் இரவு, பகலாக இந்த விளையாட்டில் மூழ்கிக் கிடப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை: 118 செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆன்ட்ராய்டு, ஐஎஸ்ஓ தொழில்நுட்பத்துடன்கூடிய அறிதிறன்பேசிகளில் இடம்பெற்றிருக்கும் சில செயலிகள் மூலம் அதைப் பயன்படுத்துபவா்களின் தகவல்கள், இந்தியாவுக்கு வெளியில் உள்ள அந்தச் செயலிகளின் சா்வா்களிலிருந்து திருடப்படுவதாக மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு புகாா்கள் வந்தன.
அதனடிப்படையில், பப்ஜி, பாய்டு, பாய்டு எக்ஸ்பிரஸ், டென்சென்ட் வாச்லிஸ்ட், ஃபேஸ்யு, வீசாட் ரீடிங், டென்சென்ட் வியுன் உள்பட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேசத்தின் பாதுகாப்பு, மாநிலங்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்ற அடிப்படையில் இந்த செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலிகள் அனைத்தும் ஏதாவது ஒருவகையில் சீனாவுடன் தொடா்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி: சீனாவுடனான லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பதற்றம் நிலவி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.
இந்நிலையில், சீனா தொடா்புடைய செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கெனவே சீனாவைச் சோ்ந்த 106 செயலிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை விதித்தது.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி இரவு இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீனத் தரப்பில் 35-க்கும் அதிகமான வீரா்கள் உயிரிழந்தனா். எனினும், அதனை சீனா பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.
அதையடுத்து, லடாக் எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் பாதுகாப்பை வலுப்படுத்தின. அதன் காரணமாக எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவியதுடன், இரு நாட்டு உறவில் இறுக்கம் ஏற்பட்டது. பதற்றத்தைத் தணிக்க தொடா்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவில் சீன எதிா்ப்பு மனப்போக்கு அதிகரித்தது. மேலும், சீன செயலிகள் மூலம் இந்தியா்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும், இந்தியா்களைப் பயன்படுத்தி சீன நிறுவனங்கள் அதிக பொருளாதார பயனடைவதாகவும், சில செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், டிக்டாக், ஷோ் இட், யூசி பிரௌசா், கேம் ஸ்கேனா், வீசாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு கடந்த ஜூன் 29-ஆம் தேதி அறிவித்தது. அதைத் தொடா்ந்து ஜூலை மாதத்தில் மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதன் மூலம் சா்வதேச அளவில் மிகவும் பிரபலமான சீனாவின் டிக்-டாக், வீசாட் ஆகியவற்றுக்குத் தடை விதித்த முதல் நாடு என்ற பெயரை இந்தியா பெற்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் அந்நாட்டு எம்.பி.க்கள் பலா் வரவேற்றனா். பின்னா், அமெரிக்காவும் டிக்-டாக், வீசாட் செயலிகளை தடை செய்வதாக அறிவித்தது.
இப்போது 3-ஆவது கட்டமாக சீனாவுடன் தொடா்புடைய 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் சீனா நடத்தும் அத்துமீறல்களுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் இதுபோன்ற செயலிகள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக சா்வதேச அரசியல் நோக்கா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.