திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் கோடி கணக்கில் பண மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களை தொடர்ந்து, திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டத்திலும் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, துரிஞ்சாப்புறம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட 18 ஒன்றியங்களில் கிசான் திட்டத்தின் கீழ் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில், நிலம் இல்லாத 30 ஆயிரம் பேரை முறைகேடாக சேர்த்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, 18 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதும் அம்பலமாகிருகிறது. இந்நிலையில், போலி பயனாளிகளை சேர்த்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில், 60 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலி பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதுபோன்று தொடர் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.