Showing posts with label sasikala. Show all posts
Showing posts with label sasikala. Show all posts

சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்பு..

        சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து அவர் இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார். 
 
சசிகலாவுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருவமான வரித் துறை முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2017-இல் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என சுமார் 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சுமார் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ. 5.5 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, விசாரணையின் முடிவில் சசிகலா பினாமிகளின் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியது. 
 
சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதவர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 8 கிரவுண்டு இடத்தை சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் அந்த இடத்தில்  ‘பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது’  என்று வருமான வரித்துறை சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் ஒட்டியது. இதுதொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
 
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து அவர் இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். 
 
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி ஒவ்வொரு மாதமும் 3 நாள்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடக சிறை விதியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே 43 மாத காலம் சிறை தண்டனை காலம்  முடிவடைந்து உள்ள சசிகலா, 43 மாதங்களுக்கு தலா 3 நாள்கள் வீதம் 129 நாள்கள் தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி உடையவர் ஆகிறார். எனவே இந்த மாதம்(செப்டம்பர்) இறுதியில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் என்றார்.
 
மேலும் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி சொத்து என்று வருமான வரித்துறையினர் எப்படி சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை. வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். நான் சசிகலாவின் வழக்குரைஞராக சொல்ல விரும்புவது அவருக்கோ அல்லது எங்களுக்கோ இதுவரை வருமான வரித்துறையின் நோட்டீஸ் நகல் கிடைக்கவில்லை. சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 
 
சசிகலா கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம் என்று வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.