Showing posts with label covid. Show all posts
Showing posts with label covid. Show all posts

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.91 கோடியை எட்டியுள்ளது.

 

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.91 கோடியை எட்டியுள்ளது. நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,28,290 ஆக உயர்ந்துள்ளது. 
 
உலக நாடுகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2,91,85,779 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,28,290 ஆக உள்ளது. 
 
உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 67,08,458 பேரும், இந்தியாவில் 48,46,427 பேரும், பிரேசிலில் 43,30,455 பேரும், ரஷியாவில் 10,62,811 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. 
தற்போது 72,26,460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,479 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கரோனா பாதித்து 21,031,029 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெங்களூருவில் பெண் ஒருவர் 2-வது முறை கரோனா வைரஸ்

 

பெங்களூருவில் பெண் ஒருவர் 2-வது முறை கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அங்கு 2-வது முறையாக பாதிப்புக்குள்ளாகும் முதல் நபர் இவர்.
இதுபற்றி பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்திருப்பதாவது:
“பெங்களூருவில் முதன்முறையாக 27 வயது பெண் ஒருவர் கரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானதையடுத்து, அவர் வீடு திரும்பினார். எனினும், ஒரு மாதத்துக்குப் பிறகு அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, அவருக்கு கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது.”

தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்கு கரோனா தொற்று

 


சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,924 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4,45,851 ஆக உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் இன்று 968 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 1,38,724 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 4,924 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 593 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 590 பேருக்கும்தொற்று உறுதி ஆகியுள்ளது.  

தமிழகத்தில் இன்று 5,892 பேருக்குக் உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,45,851. சென்னையில் மட்டும் 1,38,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிசிஆர் பரிசோதனை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 37 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 7,85,402.

சென்னையில் 968 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,924 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கன்னியாகுமரி தொகுதி எச். வசந்தகுமார் (எம்.பி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான எச். வசந்தகுமார் இன்று, வெள்ளிக்கிழமை, மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வசந்தகுமாருக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலை இன்று மோசமடைந்து, இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வசந்தகுமாா் (70), கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். இவரது நோ்முக உதவியாளா் போத்திராஜுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வசந்தகுமாா் எம்.பி., அவரது மனைவி தமிழ்ச்செல்வி (61) ஆகியோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், அவா்கள் இருவருக்கும் கரோனா இருப்பது 10-ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இருவரும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். வசந்தகுமாரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது வாழ்க்கையை ஒரு விற்பனையாளராக தொடங்கிய வசந்தகுமார், தொடக்கத்தில் சொந்தமாக ஒரு மளிகைக் கடையை ஆரம்பித்தார். பின்னர் 1978-ஆம் ஆண்டு வசந்த் அண்ட் கோ என்ற வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கடையைத் தொடங்கினார். தற்போது தமிழகம், புதுச்சேரி என 64 கிளைகளுடன் வசந்த் அன்ட் கோ கிளை பரப்பியுள்ளது.

இரண்டு முறை எம்எல்ஏவாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2016-ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினரானதை அடுத்து, நாங்குநேரி எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார். 

கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும் ?




 
 
கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சராசரியாக 1,000 பேர் உயிரிழக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ‘தடுப்பூசி ஒன்று தான் அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என, மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் நம்பத்தகுந்த வகையில் தயாராகியுள்ளன. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தார், ‘ஜைகோவ் டி’ என்ற தடுப்பூசியை தயாரித்து இருக்கிறார்கள்.

இதேபோல், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் கரம் கோர்த்து ஒரு தடுப்பூசியை (கோவிஷீல்டு) உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிப்பதற்கு புனேயில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் போட்டுள்ளது.
 
கோவேக்சின் மற்றும் ஜைகோவ் டி தடுப்பூசிகளை முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற பரிசோதனை முடிந்துள்ளது. 2வது கட்ட பரிசோதனையும் வெற்றிகரமாக செல்கிறது என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா சமீபத்தில் அறிவித்துள்ளார். அதே போல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின், 2, 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்தி குறித்து பேசியுள்ள சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனாவாலா, ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தயாரிப்புக்காக 200 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது தடுப்பூசிகள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. முதல்கட்டம் வெற்றி பெற்றதால் தயாரிப்பை தொடங்கியுள்ளோம். ஆனால் அடுத்த கட்டங்களில் தடுப்பூசி சோதனை தோல்வி அடைந்தால், இப்போது தயாரிக்கப்படும் தடுப்பூசி வீணாகிவிடும். இந்த மாதமே மூன்றாம் கட்ட பரிசோதனையும் தொடங்கும். முழுமையாக பரிசோதனை முடிய 3 மாதங்கள் வரை ஆகலாம். நவ., மாதம் பரிசோதனை முடிந்த பிறகு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததும், உடனே தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்’ என்றார்.

மேலும், தடுப்பூசி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் செலுத்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரம் மாதம் 60 மில்லியன் தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் 30 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும்.

2021ம் ஆண்டு தொடக்கத்தில்…

‘2020ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2021ம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் தடுப்பூசிகள் பரிசோதனைக் கட்டங்களைக் கடந்து மக்களுக்குச் செலுத்துவதற்கான ஒப்புதல்களைப் பெறும். எனவே, இந்தியா 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியைப் பெறும். உலகளாவிய தேவையில் 40 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்யும்’ என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் இரண்டு மருத்துவமனைகளில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமசந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் இன்னும் 4 மாதத்துக்கு கட்டாயம் மாஸ்க்


சென்னையில் இன்னும் 4 மாதத்துக்கு கட்டாயம் மாஸ்க் தேவைதான் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா இல்லாதவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் கமிஷன் தருவதாக தவறான தகவலை பரப்புகின்றனர் எனவும் கூறினார்.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசிக்கான மனித பரிசோதனை

 


ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசிக்கான மனித பரிசோதனை புனேவில் உள்ள மருத்துவ கல்லூரியில் இன்று துவங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புகளை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், நோய்க்கான தடுப்பூசியை கண்டறியும் ஆராய்ச்சிகளில் பல நாடுகளும் களமிறங்கி உள்ளன. பல நாடுகளிலும் தடுப்பூசிக்கான மனித பரிசோதனை இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் உள்ளன. மஹாராஷ்டிராவின் புனேவில் இன்று (ஆக.,26) ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்துக்கான மனித பரிசோதனை துவங்கியது. இந்தியாவில் கோவிஷீல்ட் எனப்படும் இந்த மருந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலை, ஆஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தை கண்டறிய புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்கு (SII) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டாம் கட்ட மனித சோதனைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 தளங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவில் தடுப்பு மருந்தை குறைந்த விலையில் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் (SII) தெரிவித்தனர். தொடர்ந்து, புனேவின் பாரதி வித்யாபீட மருத்துவ கல்லூரியில் மனித பரிசோதனைக்கு (Human Trial) தற்போது 5 தன்னார்வலர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் இருவருக்கு கோவிட்ஷீல்ட் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டுபேரும் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர்.

300 முதல் 350 தன்னார்வலர்களை சேர்க்கும் இலக்கு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி சோதனைக்கு 18 முதல் 99 வயதிற்கு உட்பட்டவர்கள் பரிந்துரைக்கப் படுகிறார்கள். மஹாராஷ்டிராவில் அடுத்த ஒரு வாரத்தில் குறைந்தது 25 பேருக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சோதிக்கப்படும். தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்பு, 2 மாதங்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இந்தியாவை பொறுத்தவரை 17 மையங்களுக்கு தடுப்பூசி சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டின் தடுப்பு மருந்து ஏற்கனவே பிரிட்டனில் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் அது நல்ல பலன்களையே கொடுத்தது. அதனையொட்டியே இந்தியாவில் ஆய்வுக்காக உட்படுத்தப்படுகிறது.

தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 14 நாட்களில் செல்கள் தூண்டப்பட்டு, 28 வது நாளில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அது தொற்றுக்கு எதிராக செயல்படும். நோய் எதிர்ப்பு என்பது புரோட்டீன் மூலக்கூறுகளாகும். இவை வைரஸை சமன்படுத்தும். துவக்கத்தில் செல்களை வைரஸ் பாதிக்காமல் பாதுகாக்கப்படும். சோதனைகள் நடத்தப்படவுள்ள மற்ற மருத்துவமனைகளில், புனேவின் பிஜே மருத்துவ கல்லூரி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, பாட்னாவில் உள்ள ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி மருத்துவ அறிவியல் நிறுவனம், சண்டிகரில் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோரக்பூரில் உள்ள நேரு மருத்துவமனை மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மருத்துவக் கல்லூரி ஆகியவை அடங்கும்