Showing posts with label mp vasantahakumar. Show all posts
Showing posts with label mp vasantahakumar. Show all posts

கன்னியாகுமரி தொகுதி எச். வசந்தகுமார் (எம்.பி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான எச். வசந்தகுமார் இன்று, வெள்ளிக்கிழமை, மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வசந்தகுமாருக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலை இன்று மோசமடைந்து, இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வசந்தகுமாா் (70), கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். இவரது நோ்முக உதவியாளா் போத்திராஜுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வசந்தகுமாா் எம்.பி., அவரது மனைவி தமிழ்ச்செல்வி (61) ஆகியோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், அவா்கள் இருவருக்கும் கரோனா இருப்பது 10-ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இருவரும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். வசந்தகுமாரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது வாழ்க்கையை ஒரு விற்பனையாளராக தொடங்கிய வசந்தகுமார், தொடக்கத்தில் சொந்தமாக ஒரு மளிகைக் கடையை ஆரம்பித்தார். பின்னர் 1978-ஆம் ஆண்டு வசந்த் அண்ட் கோ என்ற வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கடையைத் தொடங்கினார். தற்போது தமிழகம், புதுச்சேரி என 64 கிளைகளுடன் வசந்த் அன்ட் கோ கிளை பரப்பியுள்ளது.

இரண்டு முறை எம்எல்ஏவாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2016-ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினரானதை அடுத்து, நாங்குநேரி எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார்.