கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும் ?




 
 
கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சராசரியாக 1,000 பேர் உயிரிழக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ‘தடுப்பூசி ஒன்று தான் அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என, மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் நம்பத்தகுந்த வகையில் தயாராகியுள்ளன. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தார், ‘ஜைகோவ் டி’ என்ற தடுப்பூசியை தயாரித்து இருக்கிறார்கள்.

இதேபோல், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் கரம் கோர்த்து ஒரு தடுப்பூசியை (கோவிஷீல்டு) உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிப்பதற்கு புனேயில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் போட்டுள்ளது.
 
கோவேக்சின் மற்றும் ஜைகோவ் டி தடுப்பூசிகளை முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற பரிசோதனை முடிந்துள்ளது. 2வது கட்ட பரிசோதனையும் வெற்றிகரமாக செல்கிறது என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா சமீபத்தில் அறிவித்துள்ளார். அதே போல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின், 2, 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்தி குறித்து பேசியுள்ள சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனாவாலா, ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தயாரிப்புக்காக 200 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது தடுப்பூசிகள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. முதல்கட்டம் வெற்றி பெற்றதால் தயாரிப்பை தொடங்கியுள்ளோம். ஆனால் அடுத்த கட்டங்களில் தடுப்பூசி சோதனை தோல்வி அடைந்தால், இப்போது தயாரிக்கப்படும் தடுப்பூசி வீணாகிவிடும். இந்த மாதமே மூன்றாம் கட்ட பரிசோதனையும் தொடங்கும். முழுமையாக பரிசோதனை முடிய 3 மாதங்கள் வரை ஆகலாம். நவ., மாதம் பரிசோதனை முடிந்த பிறகு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததும், உடனே தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்’ என்றார்.

மேலும், தடுப்பூசி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் செலுத்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரம் மாதம் 60 மில்லியன் தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் 30 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும்.

2021ம் ஆண்டு தொடக்கத்தில்…

‘2020ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2021ம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் தடுப்பூசிகள் பரிசோதனைக் கட்டங்களைக் கடந்து மக்களுக்குச் செலுத்துவதற்கான ஒப்புதல்களைப் பெறும். எனவே, இந்தியா 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியைப் பெறும். உலகளாவிய தேவையில் 40 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்யும்’ என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் இரண்டு மருத்துவமனைகளில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமசந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.