ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தம்..

லண்டன்: ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மனிதர்களிடம் நடத்தப்படும் 3ம் கட்ட சோதனையின்போது தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. ரஷ்யா மட்டுமே தற்போது வரையில் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. ஆனாலும், அதில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது. இதனையடுத்து தற்போது, மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஸ்ட்ராஜெனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து, சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிசெய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது, சில சமயம் நோய்கள் தற்செயலாக ஏற்படும்,’ என்றார்.