சிவகங்கை அருகே ஆசிரியம் பற்றிய 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

சிவகங்கை அருகே ஆசிரியம் பற்றிய 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 ஆசிரியம் கல்வெட்டுகளை சக்கந்தியைச் சேர்ந்த மலைராஜன் உதவியுடன் கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த இலந்தக்கரை ரமேஷ், கருங்காலி விக்னேஷ்வரன், காளையார்கோவில் சரவணமணியன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

கல்வெட்டுகள் குறித்து அவர்கள் கூறியதாவது: ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள். ஆசிரியம் சொல்லுடன் காணப்படும் கல்வெட்டுகள் இதுவரை தமிழகத்தில் 70-க்கும் குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

ஆசிரியம் கல்வெட்டுகள் பெரும்பாலும் தனி கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்டவையாக உள்ளன. சோழர், பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவைச் சார்ந்தோர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் படைகளை உருவாக்கி ஊர்களை பாதுகாத்து வந்துள்ளனர்.

சோழர், பாண்டியர்களுக்கு பிறகு மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்திலும் ஆங்காங்கே படைகள் இருந்தன. ஆனால் அவர்கள் ஆட்சி நிலையற்று இருந்ததால் நாட்டு மக்களின் உடைமைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் போனது.

வணிகர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவரவர் தங்களது உயிர், உடமைகளை பாதுகாக்க படைகளை வைத்து கொண்டனர். படைவீரர்களுக்கு சில உரிமைகள், வருவாய்களை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

தற்போது கோமாளிப்பட்டியில் கிடைத்திருக்கும் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியையும், மற்றொன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் சேர்ந்தது. முற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் வில், அம்பு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் படைவீரர்கள் கேழாநிலை (தற்போதைய கீழாநிலைக்கோட்டையாக இருக்கலாம்) என்ற ஊரில் தங்கியிருந்து இரட்டகுலகாலபுரம் நகரத்தார்க்கு பாதுகாப்பு தந்துள்ளனர்.

பதிமூன்றாம் நூற்றாண்டு பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் பூரண கும்ப சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் குலசேகர பாண்டியன் தனது ஆட்சிக்காலத்தில் படையை உருவாக்கி அப்பகுதிக்கு பாதுகாப்பு தந்துள்ளார் என்பதை காட்டுகிறது, என்று கூறினர்.