மாரியப்பன் தங்கவேல-. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

இந்த நாளை மாரியப்பன் தங்கவேலால் மறக்கவே முடியாது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற 2016 பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனையோடு தங்கம் வென்றது இந்த நாளில் தான். அந்தத் தருணம் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அன்று முதல் அவர் ஒரு பிரபலம். 
 
இந்தியாவுக்குப் பெருமை சோ்த்ததற்காக, சமீபத்தில் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 அன்று ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்திடமிருந்து பெற்றுக்கொண்டார் மாரியப்பன் தங்கவேலு. 1991-92 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு கேல் ரத்னாவைப் பெறும் 2-வது தமிழக வீரர் என்கிற பெருமையும் கூடுதலாகக் கிடைத்துள்ளது. 
 
2016 பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றவுடன் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 2 கோடி பரிசுத்தொகையை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ரூ. 75 லட்சம் பரிசுத்தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்தார்.
மாரியப்பனின் இந்த வெற்றிக்கு இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். 
சேலத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மாரியப்பன் தங்கவேலு. 5 வயதில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த மாரியப்பன் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் அவருடைய வலது கால் சிதைந்தது. ‘அதற்குப் பிறகு அந்தக் கால் வளரவேயில்லை. காயங்களும் ஆறவில்லை. என்னுடைய வலது காலுக்கு வயது 5 தான்’ என்கிறார் மாரியப்பன்.
காய்கறி விற்பனை செய்து வந்த அவருடைய அம்மா, மாரியப்பனின் காலைச் சரிசெய்வதற்காக 3 லட்சம் ரூபாய் வரை மருத்துவச்செலவு செய்தார். ‘அதற்கான கடனை இன்னும் அடைத்துவருகிறோம்’ என்று அப்போது பேட்டியளித்தார் மாரியப்பன்.
14 வயதில் பள்ளியில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு 2-ம் இடம் பிடித்துள்ளார். அதிலிருந்துதான் அவருக்கு இந்த விளையாட்டின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
2013-ல் தேசிய அளவிலான போட்டியில் மாரியப்பன் கலந்துகொண்டபோது பயிற்சியாளர் சத்யநாராயணனைச் சந்தித்துள்ளார். மாரியப்பனின் இந்த வளர்ச்சிக்கு அவருடைய பயிற்சியும் ஒரு முக்கிய காரணம். 
கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள மாரியப்பன் தேர்வாகியிருந்தார். ஆனால், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கிடைக்க தாமதம் ஆனதால், அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
அந்தப் போட்டியில் 1.74 மீட்டர் உயரத்தைத் தாண்டியவர் தங்கப் பதக்கத்தை வென்றார். அப்போதைய தகுதிச் சுற்றில் மாரியப்பன் 1.75 மீட்டர் உயரம் தாண்டியிருந்தார். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால், மாரியப்பனுக்கு இது 2-வது தங்கமாக இருந்திருக்கும். 
தந்தை இல்லை, காலில் ஏற்பட்ட விபத்து, இளமைப் பருவத்துக்குரிய எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாத வறுமை என பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் விடாமுயற்சியுடன் உழைத்த மாரியப்பன் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்ததுடன், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டுள்ளார்.
2016-ல் மகன் தங்கம் வென்ற பிறகு மாரியப்பனின் தாயார் சரோஜா (50) கூறியதாவது: “எங்களுக்கு சுதா (26) என்ற மகளும், மாரியப்பன் (21), குமார் (20), கோபி (16) ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். மூத்த மகன் மாரியப்பனுக்கு 5 வயது இருக்கும்போது, பேருந்து மோதியதில் வலது கால் பாதம் முழுவதும் சேதமடைந்துவிட்டது. உடனடியாக, அரசு மருத்துவமனையில் சேர்த்து குணமாக்கினோம். வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றபோது, விளையாடுவதற்கு யாரும் தன்னை சேர்த்துக் கொள்ளவில்லை மாரியப்பன் வருந்தினார். பின்னர், அவரின் விளையாட்டு ஆர்வத்தைக் கண்டறிந்த ஆசிரியர்கள், உயரம் தாண்டுதலில் அவரை ஊக்குவித்தனர்.
மாரியப்பன் சிறுவனாக இருக்கும்போதே, அவருடைய தந்தை பிரிந்து சென்று விட்டார். குடும்ப வறுமையைத் தாங்க முடியாமல், அனைவரும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினோம். ஆனால், மாரியப்பன் தான் அதைத் தடுத்து, கண்டிப்பாக வாழ்க்கை சூழ்நிலை வறுமையில் இருந்து மாறும் என்று கூறி எங்களைத் தேற்றினார். பள்ளி விடுமுறை நாள்களில், கட்டுமான வேலைகளுக்குச் சென்று, அதில் கிடைத்த கூலித் தொகையில் தனக்கான செலவையும், குடும்பத்துக்கும் வழங்கினார்’ என கண்ணீர் மல்கக் கூறினார்.
18 வயதில் பயிற்சியாளர் சத்யநாராயணாவின் கண்ணில் படும் வரை மாரியப்பனின் வாழ்க்கை போராட்டமாக இருந்துள்ளது. 2012 முதல் 2015 வரை என் குடும்பத்தைக் கரை சேர்ப்பதற்காக எல்லாவிதமான உதவிகளையும் செய்தேன் எனச் சமீபத்தில் பிடிஐ நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார் மாரியப்பன். காலை வேளையில் தினமும் 3 கி.மீ. வரை நடந்து வீடுகளுக்கு செய்தித்தாள் போடும் வேலையைச் செய்துள்ளார். இதன்பிறகு கட்டுமான வேலைகளுக்குச் சென்றுள்ளார். தினமும் ரூ. 200 சம்பாதித்து அதை அப்படியே வீட்டுக்குத் தந்துள்ளார்.