உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.91 கோடியை எட்டியுள்ளது.

 

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.91 கோடியை எட்டியுள்ளது. நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,28,290 ஆக உயர்ந்துள்ளது. 
 
உலக நாடுகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2,91,85,779 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,28,290 ஆக உள்ளது. 
 
உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 67,08,458 பேரும், இந்தியாவில் 48,46,427 பேரும், பிரேசிலில் 43,30,455 பேரும், ரஷியாவில் 10,62,811 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. 
தற்போது 72,26,460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,479 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கரோனா பாதித்து 21,031,029 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண்

 

திருநெல்வேலியில் நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண் முத்துலெட்சுமி. படங்கள்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் தாலிச்செயின், மெட்டியை கழற்றிய பின்னரே மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்காக காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் மாணவ, மாணவிகளை போலீஸார் சோதனையிட்டனர்.

தேர்வு அறைக்குள் ஹேர்பின், நகைகள், கொலுசு போன்றவற்றை அணியத் தடை செய்யப்பட்டுள்ளதால், தேர்வு மையங்களுக்குச் செல்லும் முன்னர் மாணவிகள் அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலெட்சுமி (20). இவர் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு எழுத வந்தார்.

நகைகளை கழற்ற அறிவுறுத்தல்

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த இவருக்கு, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தாலிச் செயின், மெட்டி, தலையில் பூ வைத்து வந்த முத்துலெட்சுமியை, தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் அங்கிருந்த அலுவலர்கள் நகைகளை கழற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர். தாலிச் செயின் என்பதால் முத்துலெட்சுமி தயங்கியுள்ளார். ஆனால், தேர்வு விதிமுறைப்படி நகைகள் அணிய அனுமதியில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடன் வந்த அவரது கணவர் சம்மதம் தெரிவித்ததும், தாலிச்செயின், மெட்டி ஆகியவற்றை கழற்றி கணவரிடம் முத்துலெட்சுமி கொடுத்தார். தலையில் வைத்திருந்த பூவையும் எடுத்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு அவர் தேர்வு எழுதினார்.

விரைவில் - ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

விரைவில் ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டமான ‘ஸ்வானிதி’ திட்ட பயனாளர்களிடம், பிரதமர் மோடி ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் உரையாற்றினார். இதில் ம.பி., மாநிலம் இந்தூர், குவாலியர் மற்றும் சாஞ்சி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஏழை, அடித்தட்டு மக்களை கொரோனா அதிகம் பாதித்துள்ளது. அவர்களுக்கு உதவ அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. ஸ்வானிதி திட்டத்தில், ஆரம்ப கடன் தொகை ரூ.10 ஆயிரம், உஜ்வாலா திட்ட பலன்கள், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு ஆகியவற்றை பெறலாம்.

சாலையோர விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்த ரூ.10 ஆயிரம் கடன் பெற்று, அதனை குறித்த காலத்தில் செலுத்தினால், படிப்படியாக கடன் தொகை அதிகரிக்கப்படும். இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற எந்த சேவை மையத்தையும் வியாபாரிகள் அணுகலாம்.

ஸ்வானிதி திட்டத்தில், 4.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1.4 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு 140 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் நாட்களுக்குள் அனைத்து கிராமங்களுக்கும், ஆப்டிகல் பைபர் இணைப்பு வழங்கப்படும். விரைவில் ஒவ்வொரு கிராமமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள்

 

பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் செப்.10 அன்று முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணக்கப்படுகின்றன.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் 5 ரபேல் விமானங்களும் இந்தியா விமானப்படையின் 17 வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். அவர்கள் முன்னிலையில் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன.

இந்த விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி பிரான்ஸிலிருந்து இந்தியா வந்தன. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களுக்காக இந்தியா பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் தங்கவேல-. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

இந்த நாளை மாரியப்பன் தங்கவேலால் மறக்கவே முடியாது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற 2016 பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனையோடு தங்கம் வென்றது இந்த நாளில் தான். அந்தத் தருணம் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அன்று முதல் அவர் ஒரு பிரபலம். 
 
இந்தியாவுக்குப் பெருமை சோ்த்ததற்காக, சமீபத்தில் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 அன்று ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்திடமிருந்து பெற்றுக்கொண்டார் மாரியப்பன் தங்கவேலு. 1991-92 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு கேல் ரத்னாவைப் பெறும் 2-வது தமிழக வீரர் என்கிற பெருமையும் கூடுதலாகக் கிடைத்துள்ளது. 
 
2016 பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றவுடன் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 2 கோடி பரிசுத்தொகையை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ரூ. 75 லட்சம் பரிசுத்தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்தார்.
மாரியப்பனின் இந்த வெற்றிக்கு இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். 
சேலத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மாரியப்பன் தங்கவேலு. 5 வயதில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த மாரியப்பன் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் அவருடைய வலது கால் சிதைந்தது. ‘அதற்குப் பிறகு அந்தக் கால் வளரவேயில்லை. காயங்களும் ஆறவில்லை. என்னுடைய வலது காலுக்கு வயது 5 தான்’ என்கிறார் மாரியப்பன்.
காய்கறி விற்பனை செய்து வந்த அவருடைய அம்மா, மாரியப்பனின் காலைச் சரிசெய்வதற்காக 3 லட்சம் ரூபாய் வரை மருத்துவச்செலவு செய்தார். ‘அதற்கான கடனை இன்னும் அடைத்துவருகிறோம்’ என்று அப்போது பேட்டியளித்தார் மாரியப்பன்.
14 வயதில் பள்ளியில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு 2-ம் இடம் பிடித்துள்ளார். அதிலிருந்துதான் அவருக்கு இந்த விளையாட்டின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
2013-ல் தேசிய அளவிலான போட்டியில் மாரியப்பன் கலந்துகொண்டபோது பயிற்சியாளர் சத்யநாராயணனைச் சந்தித்துள்ளார். மாரியப்பனின் இந்த வளர்ச்சிக்கு அவருடைய பயிற்சியும் ஒரு முக்கிய காரணம். 
கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள மாரியப்பன் தேர்வாகியிருந்தார். ஆனால், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கிடைக்க தாமதம் ஆனதால், அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
அந்தப் போட்டியில் 1.74 மீட்டர் உயரத்தைத் தாண்டியவர் தங்கப் பதக்கத்தை வென்றார். அப்போதைய தகுதிச் சுற்றில் மாரியப்பன் 1.75 மீட்டர் உயரம் தாண்டியிருந்தார். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால், மாரியப்பனுக்கு இது 2-வது தங்கமாக இருந்திருக்கும். 
தந்தை இல்லை, காலில் ஏற்பட்ட விபத்து, இளமைப் பருவத்துக்குரிய எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாத வறுமை என பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் விடாமுயற்சியுடன் உழைத்த மாரியப்பன் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்ததுடன், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டுள்ளார்.
2016-ல் மகன் தங்கம் வென்ற பிறகு மாரியப்பனின் தாயார் சரோஜா (50) கூறியதாவது: “எங்களுக்கு சுதா (26) என்ற மகளும், மாரியப்பன் (21), குமார் (20), கோபி (16) ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். மூத்த மகன் மாரியப்பனுக்கு 5 வயது இருக்கும்போது, பேருந்து மோதியதில் வலது கால் பாதம் முழுவதும் சேதமடைந்துவிட்டது. உடனடியாக, அரசு மருத்துவமனையில் சேர்த்து குணமாக்கினோம். வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றபோது, விளையாடுவதற்கு யாரும் தன்னை சேர்த்துக் கொள்ளவில்லை மாரியப்பன் வருந்தினார். பின்னர், அவரின் விளையாட்டு ஆர்வத்தைக் கண்டறிந்த ஆசிரியர்கள், உயரம் தாண்டுதலில் அவரை ஊக்குவித்தனர்.
மாரியப்பன் சிறுவனாக இருக்கும்போதே, அவருடைய தந்தை பிரிந்து சென்று விட்டார். குடும்ப வறுமையைத் தாங்க முடியாமல், அனைவரும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினோம். ஆனால், மாரியப்பன் தான் அதைத் தடுத்து, கண்டிப்பாக வாழ்க்கை சூழ்நிலை வறுமையில் இருந்து மாறும் என்று கூறி எங்களைத் தேற்றினார். பள்ளி விடுமுறை நாள்களில், கட்டுமான வேலைகளுக்குச் சென்று, அதில் கிடைத்த கூலித் தொகையில் தனக்கான செலவையும், குடும்பத்துக்கும் வழங்கினார்’ என கண்ணீர் மல்கக் கூறினார்.
18 வயதில் பயிற்சியாளர் சத்யநாராயணாவின் கண்ணில் படும் வரை மாரியப்பனின் வாழ்க்கை போராட்டமாக இருந்துள்ளது. 2012 முதல் 2015 வரை என் குடும்பத்தைக் கரை சேர்ப்பதற்காக எல்லாவிதமான உதவிகளையும் செய்தேன் எனச் சமீபத்தில் பிடிஐ நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார் மாரியப்பன். காலை வேளையில் தினமும் 3 கி.மீ. வரை நடந்து வீடுகளுக்கு செய்தித்தாள் போடும் வேலையைச் செய்துள்ளார். இதன்பிறகு கட்டுமான வேலைகளுக்குச் சென்றுள்ளார். தினமும் ரூ. 200 சம்பாதித்து அதை அப்படியே வீட்டுக்குத் தந்துள்ளார். 

ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தம்..

லண்டன்: ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மனிதர்களிடம் நடத்தப்படும் 3ம் கட்ட சோதனையின்போது தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. ரஷ்யா மட்டுமே தற்போது வரையில் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. ஆனாலும், அதில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது. இதனையடுத்து தற்போது, மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஸ்ட்ராஜெனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து, சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிசெய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது, சில சமயம் நோய்கள் தற்செயலாக ஏற்படும்,’ என்றார்.

சிவகங்கை அருகே ஆசிரியம் பற்றிய 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

சிவகங்கை அருகே ஆசிரியம் பற்றிய 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 ஆசிரியம் கல்வெட்டுகளை சக்கந்தியைச் சேர்ந்த மலைராஜன் உதவியுடன் கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த இலந்தக்கரை ரமேஷ், கருங்காலி விக்னேஷ்வரன், காளையார்கோவில் சரவணமணியன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

கல்வெட்டுகள் குறித்து அவர்கள் கூறியதாவது: ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள். ஆசிரியம் சொல்லுடன் காணப்படும் கல்வெட்டுகள் இதுவரை தமிழகத்தில் 70-க்கும் குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

ஆசிரியம் கல்வெட்டுகள் பெரும்பாலும் தனி கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்டவையாக உள்ளன. சோழர், பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவைச் சார்ந்தோர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் படைகளை உருவாக்கி ஊர்களை பாதுகாத்து வந்துள்ளனர்.

சோழர், பாண்டியர்களுக்கு பிறகு மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்திலும் ஆங்காங்கே படைகள் இருந்தன. ஆனால் அவர்கள் ஆட்சி நிலையற்று இருந்ததால் நாட்டு மக்களின் உடைமைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் போனது.

வணிகர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவரவர் தங்களது உயிர், உடமைகளை பாதுகாக்க படைகளை வைத்து கொண்டனர். படைவீரர்களுக்கு சில உரிமைகள், வருவாய்களை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

தற்போது கோமாளிப்பட்டியில் கிடைத்திருக்கும் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியையும், மற்றொன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் சேர்ந்தது. முற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் வில், அம்பு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் படைவீரர்கள் கேழாநிலை (தற்போதைய கீழாநிலைக்கோட்டையாக இருக்கலாம்) என்ற ஊரில் தங்கியிருந்து இரட்டகுலகாலபுரம் நகரத்தார்க்கு பாதுகாப்பு தந்துள்ளனர்.

பதிமூன்றாம் நூற்றாண்டு பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் பூரண கும்ப சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் குலசேகர பாண்டியன் தனது ஆட்சிக்காலத்தில் படையை உருவாக்கி அப்பகுதிக்கு பாதுகாப்பு தந்துள்ளார் என்பதை காட்டுகிறது, என்று கூறினர்.

400 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாக்., முயற்சிப்பதாக தகவல்கள்

லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலை பயன்படுத்தி இந்தியாவுக்குள் 400 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாக்., முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பாக்., ஏற்பாடு செய்துள்ள 400 பயங்கரவாதிகளும் இரு நாட்டு கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே உள்ள முகாம்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் வேலையில் பாக்., சிறப்பு படைப்பிரிவு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ ஏதுவாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., ராணுவம் எல்லைப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தவிர இந்திய பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்த எல்லை குழுக்களை பாக்., ஏற்பாடு செய்துள்ளது. பயங்கரவாதிகள் குரஜ், மச்சல், கெரான் தங்கார், நவுகம் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஹைபர்சானிக் சோதனை இன்று வெற்றியடைந்ததற்கு டிஆர்டிஓ-க்கு பாராட்டுகள்.

ஹைபர்சானிக் தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டிஆர்டிஓ) பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒலியைவிட 6 மடங்கு அதிவேகத்தில் ஏவும் திறன் கொண்ட ஹைபர்சானிக் தொழில்நுட்பத்தின் சோதனையை டிஆர்டிஓ இன்று (திங்கள்கிழமை) ஒடிசாவில் மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்தன. அமெரிக்கா, சீனா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்த தொழில்நுட்பத்தைப் பெறும் 4-வது நாடு இந்தியா.

இந்த நிலையில், பிரதமர் மோடி இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“ஹைபர்சானிக் சோதனை இன்று வெற்றியடைந்ததற்கு டிஆர்டிஓ-க்கு பாராட்டுகள். ஒலியைவிட 6 மடங்கு அதிவேகமாக ஏவுவதற்கு, நமது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்கராம்ஜெட் என்ஜின், உதவியுள்ளது. இன்றைய தேதியில் வெகுசில நாடுகளிடம் மட்டுமே இந்தத் திறன் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.