விரைவில் - ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

விரைவில் ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டமான ‘ஸ்வானிதி’ திட்ட பயனாளர்களிடம், பிரதமர் மோடி ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் உரையாற்றினார். இதில் ம.பி., மாநிலம் இந்தூர், குவாலியர் மற்றும் சாஞ்சி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஏழை, அடித்தட்டு மக்களை கொரோனா அதிகம் பாதித்துள்ளது. அவர்களுக்கு உதவ அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. ஸ்வானிதி திட்டத்தில், ஆரம்ப கடன் தொகை ரூ.10 ஆயிரம், உஜ்வாலா திட்ட பலன்கள், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு ஆகியவற்றை பெறலாம்.

சாலையோர விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்த ரூ.10 ஆயிரம் கடன் பெற்று, அதனை குறித்த காலத்தில் செலுத்தினால், படிப்படியாக கடன் தொகை அதிகரிக்கப்படும். இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற எந்த சேவை மையத்தையும் வியாபாரிகள் அணுகலாம்.

ஸ்வானிதி திட்டத்தில், 4.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1.4 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு 140 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் நாட்களுக்குள் அனைத்து கிராமங்களுக்கும், ஆப்டிகல் பைபர் இணைப்பு வழங்கப்படும். விரைவில் ஒவ்வொரு கிராமமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.