கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் இபிஎஸ் தெரிவித்தார்.
திருவாரூரில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: திருவாரூரில் தற்போது 460 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு தினமும் சராசரியாக 400 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நடமாடும் மருத்துவக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருவாரூரில், அரசின் நடவடிக்கையால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 10,014 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 8,321 சுய உதவிக்குழுக்களில் 93,960 உறுப்பினர்கள் உள்ளனர். சுய உதவி குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.568 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சட்டசபை தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றியும், யார் தலைமையில் கூட்டணி என்பதையும் முடிவெடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.