ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

 

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 
தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்  வெப்பச் சலனம் காரணமாக  விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், சனிக்கிழமை இரவு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமியைத் தவிர பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.